வேலூரில் இருந்து (விழுப்புரம் கோட்டம்) ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தை அணைக்கட்டு ஊசூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்பேருந்து 35 பயணிகளுடன் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் சங்கருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக அறியமுடிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு தாறுமாறாக ஓடியது.
உடனடியாக நிலைமையை உணர்ந்த அணைக்கட்டு ஊசூரைச் சேர்ந்த நடத்துநர் வேலு சமயோஜிதம் சிந்தித்து, பேருந்தின் பிரேக்கை அழுத்தி சாவியின் மூலம் பேருந்தை ஆப் செய்து நிறுத்தினார். இதனால், பேருந்து சாலையின் எதிர்பக்கம் பேருந்து செல்லாமல், அருகில் இருந்த கம்பத்தின் மீது மோதி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் முட்டி நின்றது.
பேருந்து தடுப்பு சுவரின் மீது நின்றதால், அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு படுகாயமும் இன்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் ஓட்டுநர் வேலுவை, மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் வண்டியைவிட்டு கீழே இறக்கி போக்குவரத்தினை சரி செய்தனர்.
சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தினை நிறுத்தி பெரும் விபத்தினை தடுத்த நடத்துநரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : மு.க. அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவின் வெற்றியை பாதிக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜு