திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெசக்குட்டை வனப்பகுதியில் இருந்து நாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பீம குளம், அர்ஜூனன் கொட்டாய் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, மாமரம், கற்றாலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
இந்த யானையை விரட்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்த நிலையில், நேற்று (மே 17) இரவு முழுவதும் யானை விவசாய நிலத்திற்கு வரவிடாமல் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும், கோடைகாலத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளை தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும், விவசாய நிலத்தை சேதப்படுத்தும் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதேபோல, நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் பலாப்பழம், மங்குஸ்தான் இறம்புட்டான், துரியன், பம்ப்ளிமாஸ் போன்ற அரிய வகை பழ மரங்கள் உள்ளன. தற்போது இம்மரங்களில் பழங்கள் காய்த்துள்ளன.
இதன் காரணமாக உணவு, தண்ணீருக்காக குட்டியுடன் கூடிய மூன்று காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன. நாள்தோறும் விளைநிலங்களில் புகுந்து பழங்களை உண்பதுடன் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலங்களில் உள்ள காட்டு யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உயிருக்கு போராடிய சிறுத்தை: மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற வனத்துறையினர்