திருப்பத்தூர்: கண்காணிப்புப் படக்கருவி(சிசிடிவி) இருப்பதைக் கண்டு திருடர்கள் ஓட்டம் பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மாதனூர் எனுமிடத்தில் சாலையோரம் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் கடை இயங்கி வருகிறது.
விஜயகுமார், வழக்கம்போல் நேற்று முந்தினம் (செப். 11) கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றார். எப்போதும் போல நேற்று (செப்.12) காலையில் வந்து கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாகச் சென்று கண்காணிப்பு படக்கருவி மூலம் பதிவாகிய காட்சிகளை பார்த்தபோது, திருடர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். அப்போது படக்கருவி கண்காணித்துக் கொண்டிருப்பதைக் கண்டு உடனே திரும்பி ஓட்டம் பிடித்தனர்.
இதனால் கடையிலிருந்த பணம், பொருட்கள் என எதுவும் திருட்டு போகாததால் கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் மாதனூர் பகுதியில் மின்சார உதிரிபாக கடையின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத 3 பேர் கடையில் கண்காணிப்பு படக்கருவி இருப்பதைக் கண்டு திருட வந்த கையோடு ஓட்டம் பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.