திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று காலியாக உள்ள ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை தவிர்த்து, ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புனு தாக்கல் நிறைவுபெற்றது.
ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் அதற்கான பரப்புரைகள் நேற்று முன்தினம் (ஜூலை 7) முடிவடைந்தது. இந்த தேர்தல் நாயக்கனேரி பகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடி மையங்கள், பனங்காட்டேரி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையம் மற்றும் காமனூர் தட்டு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையம் என மொத்தம் ஆறு வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்காக நேற்று (ஜூலை 8) அந்த ஆறு வாக்குச்சாவடி மையங்களுக்கும் மாதனூர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து வாக்குசீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகள் தேர்தல் அலுவலர் தலைமையில் கொண்டுவரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 9) நடைபெறும் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டேரி, காமனூர் தட்டு பகுதியில் உள்ள ஒன்பது வார்டுகளில், ஆண் வாக்காளர்கள் ஆயிரத்து 716, பெண் வாக்காளர்கள் ஆயிரத்து 687 என மொத்தம் 3ஆயிரத்து 403 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தவுள்ளனர்.
தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக ஆம்பூர் காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150 காவலர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். தேர்தலின் போது நாயக்கனேரி ஊராட்சியில் வெளியாள்கள் யாரும் இருக்ககூடாது என காவல் துறையினர் உத்தரவிட்டனர்.
இருந்தபோதிலும், ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் நாயக்கனேரி பகுதியில் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகே திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நிலையில் அந்நபரை காவல் துறையினர் நாயக்கனேரி கிராமத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆபத்து; பாதுகாப்பு கேட்டு ஜெயக்குமார் மனு