திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்புராஜபாளையம் அருகே உள்ள கணவாய்மேடு குட்டை என்ற இடத்தில், சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கணவாய்மேடு, வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ளதால் இதுவரை அந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமலே இருக்கிறது.
இந்நிலையில், கணவாய் மேடு ஸ்கூல் தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் என்பவரது 12 வயது மகன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்துள்ளது. இதனால் மயக்கம் அடைந்த சிறுவனை, அப்பகுதி மக்கள் தோளில் சுமந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்து, பின்னர் இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்த நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 1) மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இதனைத்தொடர்ந்து சிறுவனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கதவாளம் அடிவார பகுதிக்கு கொண்டு வந்த உறவினர்கள், கொட்டும் மழையிலும் டோலி கட்டி கணவாய்மேடு வரை மீண்டும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று இறுதி சடங்குகளை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடர்ந்த காடு... நீடித்த இருள்...'டோலி' கட்டி 8 கி.மீ. தூரப்பயணத்தில் மருத்துவமனை சென்ற கர்ப்பிணி!