திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரின் மையப் பகுதியில் பாலாற்றில் கிளை ஆறு செல்கிறது. இதில் கழிவுநீர் அதிகம் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு கனிமவளம் சுரங்கத் துறை மூலம் கனிமவள சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் பெற்றார்.
இந்த நிதியின் மூலம் ஷாகிராபாத் முதல் ஆற்றுமேடு பகுதிவரை 660 மீட்டர் நீளத்திற்கு 1.5 மீட்டர் அகலத்தில் குடியிருப்பு சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று (ஜன.07) தொடங்கியது. இத்தகவலை அறிந்த வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமாரும், அவரது ஆதரவாளர்களும் பணி நடக்கும் இடத்திற்கு வந்து இப்பணியை செய்யக்கூடாது எனவும் இந்த கால்வாய் அமைக்கும் திட்டப்பணி குறித்து வரைபடத்தை காண்பித்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிப்போம் எனவும் கூறி அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தை மறித்து, பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர் இதனால் திட்டப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு தோண்டிய கால்வாய் பள்ளங்கள் மூடப்பட்டன. உயர் அலுவலர்களிடம் தெரிவித்து மீண்டும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு வந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கழிவுநீரோடு வாழ்ந்துவரும் கோயில் கற்தூண்கள்!