திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாட்டூர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி, விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறித்துக் கொண்டிருந்த தனது தாய்க்கு 14 வயது சிறுமி ஒருவர், சாப்பாடு கொடுப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, காரில் திடீரென வந்த நபர் ஒருவர், சிறுமியை கடத்த முயன்றுள்ளார். சிறுமி பயத்தில் கூச்சலிடுவதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆட்கள் வருவதைக் கவனித்த அடையாளம் தெரியாத நபர், உடனடியாக அங்கிருந்து காரில் தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் சிறுமியைக் கடத்த முயன்றது முன்னாள் திமுக இளைஞரணி ஊராட்சி அமைப்பாளரும், பிரபல சாராய வியாபாரியுமான அஜித் (என்கின்ற) பாஷா எனத் தெரியவந்துள்ளது. கடந்த 50 நாள்களாக தலைமறைவாக இருந்த அஜித்தை, நேற்று(நவ.14) ஆம்பூர் பகுதியில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இவர் கள்ளத்தனமாக சாராயம் விற்று வந்த வழக்கில் பலமுறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.