தமிழ்நாட்டின் 35ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு நிர்வாக வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் போன்ற பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கவும் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூட்ட அரங்கம் கட்டப்பட்டது.
இந்தக் கூட்ட அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதனை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி திறந்துவைத்தார். பின்னர் 32ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வீரமணி, "கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் இவைகளை முன்னிறுத்தி தான், மாவட்டத்தின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் மக்களுடைய தேவைகளை விரைந்து நிறைவேற்ற முடியும். அதனடிப்படையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மக்களின் தேவைகளை அறிந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்தின் கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு மாநிலத்திலேயே முதன்மை மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உள்பட பலர் பங்கேற்றனர்.