திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 1) மாவட்டத் துணைத் தலைவர் ஜெயவேல் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அதில், “அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீதத்தின் படி, வேலை வழங்கிட வேண்டும். வறுமைக்கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும். மாதாந்திர உதவித்தொகை 3,000 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும். வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், ‘தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே! எங்களை அலைக்காதே!’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பிரவீன் ஜெயச்சந்திரன் ஆகியோர், அவர்களிடத்தில் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
பின்னர், மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக சமரசம் பேசியதன் அடிப்படையில், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ.3 லட்சம் மோசடி..!!