திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட கரீமபாத் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஊராட்சி சார்பில் இதுவரையில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மழை காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் தேங்கி நிற்ப்பதால் மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள காலி வீட்டு மனைகளில் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது அப்பகுதியில் 10 அடி பொது வழியை அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஒருவர் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் எழுப்பி உள்ளார்.
இதனையடுத்து அடிப்படை வசதிகள், பொது வழி ஆக்கிரமித்து கட்டியுள்ள தடுப்பு சுவர் அகற்ற கோரி ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்தும் அலுவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.