உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட நிலை அடைந்திருக்கிறது. இதுவரை 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 14 பேர் உயிரிழந்தனர் என தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முழுமையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டதாக சிவப்பு குறியீடு மாவட்டங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதன் தாக்கத்தை தடுக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், வாணியம்பாடியில் மட்டும் கரோனா பெருந்தொற்று 8 பேருக்கு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் நேற்று (ஏப்ரல் 15) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிகர்கள், விவசாயிகள், சுகாதாரத் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
அதனடிப்படையில், வாணியம்பாடி முழுமையாக தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது. இன்று முதல் மளிகை கடைகள், காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகள், மருந்தகங்கள் ஆகியவை இயங்காது என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், மருந்தகங்கள் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டிய அவசியம் இல்லை, பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகள் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. வாணியம்பாடி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படாது. வாணியம்பாடி நகரத்தில் உள்ள அனைத்து வார்டு வழித்தடங்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்கு - 82700 07135, குடிநீர் & சுகாதார தேவைக்கு - 82700 07148, காவல்துறை உதவிக்கு - 82700 07149 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மலங் சாலை, சி.எல்.சாலை, ஜின்னா சாலை, வாரச்சந்தை ஆகிய பகுதிகள் ஆளரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வாணியம்பாடியில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து 144 தடை உத்தரவை தீவிரப்படுத்தும் வகையில் நகராட்சி பகுதிகள் முழுவதும் சீல் வைத்து கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தூய்மை பணியாளர்களுக்கு இலவச ரிப்பேர் - மெக்கானிக் சேகரின் மகத்தான சேவை