திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், அலுவலர்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோர் பங்கேற்றனர்.
அதில், கரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வீரமணி பேசுகையில்; "கரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
திருப்பத்தூரில் இதுவரை யாருக்கும் தோற்று இல்லை. மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோர் அவர்களது பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலத்திலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்துள்ள 1700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் கரோனா பற்றி வதந்தி பரப்பினால், காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.
மேலும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒருகோடி ரூபாய் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை