திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஈவிஎம் & விவி பேட் இயந்திரம் ஆகியவற்றை எப்படிக் கையாள்வது போன்ற விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் எப்படிக் கையாள்வது போன்ற விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவனருள் பேசியதாவது: "கடந்த கால தேர்தலைவிட இந்தத் தேர்தலில் புதிய சவால்கள் உள்ளன. இந்தத் தேர்தலில் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. கரோனா சமயத்தில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளை ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
சுமார் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுகளை 19ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் மிகச்சரியாக அதை கையாள வேண்டும். கடந்த தேர்தலில் இருந்த வாக்குச்சாவடிகளைவிட தற்போது 341 வாக்குச்சாவடிகள் கூடுதலாக உள்ளன. அதில் 143 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ளன.
மண்டல தேர்தல் அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்கூட்டியே சென்று பிரச்னைக்கு உரிய விஷயங்களைக் களைய வேண்டும். கரோனா நோய்த்தொற்று சம்பந்தமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைளையும் வாக்குப்பதிவுக்கு முன்பே எடுக்கவேண்டும். மாவட்டத் தேர்தல் அலுவலரின் பிரதிநிதியாக அனைத்து மண்டல அலுவலர்களும் கம்பீரமாக செயல்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் நமக்கு கொடுத்துள்ள விதிமுறைகளை சரியாகப் பின்பற்றி அமைதியான முறையில் தேர்தல் நடக்க உதவுங்கள். புரிந்து கொள்வது ஒன்று செயல்படுத்துவது ஒன்று என்றில்லாமல் ஒருசேரப் பணியாற்றுங்கள்" என்றார்.
இதையும் படிங்க:'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' - அறிவிப்புப் பலகை மூலம் எதிர்க்கும் கிராமத்தார்