கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் கரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு முகக் கவசங்கள், தொப்பி, கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், இப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார, தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக வேலை செய்து வருவதால் நம்முடைய மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு கை கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரத்து 755 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகை ஜோதிகாவின் கேள்வியில் அர்த்தம் உள்ளது - கி.வீரமணி