திருப்பத்தூர்: செவிலியர் சிகிச்சையளித்ததால் ஒன்றரை வயது குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார், இவரது மனைவி சோனியா இவர்களுக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஒரு வருட காலமாக சளி பிரச்னையால் கணேஷ் குமாரின் குழந்தை அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றன. இதன் காரணமாக நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவரான கிரிஜா என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் குழந்தைக்கு இருமல் மற்றும் சளி அதிகமானது. இதனால், தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பணி மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவரின் ஆலோசனையின் படி பணியில் இருந்த செவிலியர், ஒன்றரை வயது குழந்தைக்கு நெப்லைடேசன் (Nebulization) சிகிச்சை அளித்ததாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: செங்கல் சூளையில் இறந்த கிடந்த தம்பதி - புகை தாங்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பா?
அதன் பின்னர், கணேஷ் குமார் மருத்துவமனையில் இருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதனை அடுத்து, பிற்பகலில் குழந்தைக்கு மீண்டும் இருமல் பிரச்னை வந்துள்ளதாக கூறப்படுகின்றன. இதனை தொடர்ந்து, கணேஷ் குமார் குழந்தையை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது, பணியில் இருந்த அரசு மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்து, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர்கள், செவிலியர் சிகிச்சை அளித்ததால் தான் நன்றாக இருந்த குழந்தை, திடீரென உயிரிழந்தது என குற்றம் சாட்டினர். மேலும், குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பணியில் இல்லாத மருத்துவர் மீதும், சிகிச்சை அளித்த செவிலியர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனை அடுத்து, உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் உடலை அடக்கம் செய்ய, குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் மாயம்; தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!