2019 நவம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டின் 35ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டு, 2019 நவம்பர் 28ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவந்ததையடுத்து, புதியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகத்திற்குச் சொந்தமான காலி இடத்தில் புதிய மாவட்ட அலுவலகம் கட்ட இடம் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில் சுமார் 14 ஏக்கர் காலியிடத்தில் 27,386 சதுர மீட்டர் பரப்பளவில் புதியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க 109.71 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டது.
அதன்படி இன்று, இந்தக் கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார். தரைத்தளத்துடன்கூடிய 7 மாடி கட்டடத்தை 18 மாத கால அவகாசத்தில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.
இக்கட்டடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகம், மகளிர் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பிரிவு, மாவட்ட தொழில் மையம், வீட்டு வசதி வாரியம், தாட்கோ, மாற்றுத்திறனாளி அலுவலகம், சமூக நலத் துறை, தேர்தல் பிரிவு, நகர்ப்புற வளர்ச்சி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, கால்நடை பராமரிப்புத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், செய்தி மற்றும் சுற்றுலாத் துறை, தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலம், போக்குவரத்து துறை, வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை, என முக்கிய அரசு துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைத்திட முடிவு செய்துள்ளனர்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்