திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மாதனூர் - உள்ளி ஆகிய ஊர்களை இணைக்கக் கூடிய தரைப்பாலம் ஒன்று உள்ளது. இங்கு, தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் விட்டு விட்டு பெய்த தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாதனூர்-உள்ளி பகுதிகளை இணைக்கக் கூடிய தரைப்பாலம் நீரில் அடித்துச்செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்டது. அப்போது மாணவர்கள், பொதுமக்கள் மாதனூரில் இருந்து உள்ளி, வளத்தூர், சின்ன தோட்டாளம், தொட்டாளம், குடியாத்தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லக்கூடிய மக்கள் போக்குவரத்து தடையால் சுமார் 20 கி.மீ., தூரம் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அரசு சார்பில் மணல் மூட்டைகள் ராட்சத பைப்புகள் அமைத்து தற்காலிக சாலை அமைத்து போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலையில் கடந்த மே 19ஆம் தேதி பெய்த மழை காரணமாக 2ஆவது முறை ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஐந்து நாள்களாக ஆந்திர வனப்பகுதி மற்றும் மாவட்ட முழுவதும் விட்டு விட்டு பெய்த மழை காரணமாக பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த பச்சைக்குப்பம் பகுதியிலுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பாதுகாப்புக்கருதி போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பாலத்தின்கீழ் முறையாக நீர் செல்ல முடியாமல் ஏரி போல் ஒருபுறம் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால், பாலம் மீண்டும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை