குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் அதனை ரத்து செய்யக் கோரியும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் இஸ்லாமிய கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், AIMIM கட்சியின் தேசியத் தலைவர், அசாதுதீன் ஓவைசி, அப்தூர் ரகுமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுகன் காந்தி, ஜாமியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில், பெண்கள் உட்பட சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா, "தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் உரிமையைப் பெற மிக வலிமை வாய்ந்த போராட்டம் என்ற வார்த்தையை உபயோகின்றனர்" எனக் கூறினார். அப்போது 'காலா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நிலத்தின் உரிமையை மீட்போம்' என்ற பாடலைப் பாடி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், 'இஸ்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. ஒரு பிரிவினரை இந்து மதத்தில் இழிவுப் படுத்தி அழிக்க நினைத்ததினால் தான் இஸ்லாம் வந்தது. குடியுரிமை இல்லாதவனுக்கு கல்வி, வேலை, மருத்துவம், கூலி கிடைக்காது. இங்கு யாரும் இந்து அல்ல. வேதத்தை ஏற்றுக்கொண்டவன் மட்டுமே இந்து.
எங்கள் உயிர் போனாலும் போகுமே தவிர, தமிழ்நாட்டில் இஸ்லாமியர் என பிரிப்பதை ஏற்க முடியாது. பாஜகவுக்கு தமிழனை பார்த்தாலும் பயம். உண்மை, வரலாற்றைப் பார்த்தாலும் பயம். இந்திய தேசிய ராணுவத்தை அமைக்க முதன்முதலில் முன்வந்தவர்கள் தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தான். ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இதுவரையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றியதில்லை. நேதாஜியின் ராணுவப்படை வீழ்ந்ததற்கு முக்கியக்காரணம் ஆர்எஸ்எஸ் படை தான்" என கடுமையாகச் சாடி பேசினார்.
இதன் பின்னர் பேசிய அசாதுதீன் ஓவைசி, "குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மக்களைப் பிரிக்க பார்க்கிறார்கள். பிரதமர் பொய் சொல்கிறார். அஸ்ஸாமில் 5 லட்சத்து 30 ஆயிரம் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தர மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சொல்வது என்னவென்றால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நில்லுங்கள். உலமாக்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் நிதி உதவி வேண்டாம். அதற்குப் பதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் நேரில் சென்று அவருக்கு மாலை அணிவித்து நன்றி சொல்வேன்" என்றார்.
இதையும் படிங்க: அவினாசி விபத்து: ’உயிரிழந்தவர்களின் உடல் அடையாளம் காணப்பட்டு கேரள குழுவினரிடம் ஒப்படைக்கப்படும்’ - ஆட்சியர்