திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள பாலாறு அதனையொட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் இரவில் மணல் கடத்தி வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையிலான வருவாய் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆலாங்குப்பம் பாலாற்று பகுதியிலிருந்து பெரியாங்குப்பம் நோக்கி மணல் கடத்திச் சென்ற 4 மாட்டு வண்டிகளை பிடித்து விசாரணை செய்ததில் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு, ராஜேஷ் குமரன் மற்றும் ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான மாட்டுவண்டிகள் என தெரிய வந்தது .
தொடர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் பேரில் 4 பேரை வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையிலான வருவாய் துறையினர் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன், 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதையும் படிங்க:கார்பன் ஷீட்டில் சுற்றி தங்கம் கடத்திய பெண் கைது: 481 கிராம் தங்கம் பறிமுதல்!