திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகை கடைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி கெங்கையம்மன் ஆலயம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கோயிலைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.
கார்த்திகை தீபத்தன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் காணிக்கையளித்த பணத்தை கோயில் நிர்வாகத்தினர் கோயிலில் உள்ள உண்டியலில் பூட்டிவைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று (நவ. 30) இரவு கோயிலின் பூட்டை உடைத்து நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பக்தர்கள் காணிக்கை செலுத்திய ரூபாய் 50 ஆயிரத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் கோயில், பஜார் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு இக்கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.