திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலையை சேர்ந்தவர் சக்திவேல். இவரும் ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சக்திவேல், ஐஸ்வர்யாவை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால், மன வேதனை அடைந்த ஐஸ்வர்யா தனது நண்பர்களான சாந்தகுமார், பூவரசன், ஹரி ஆகியோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனையடுத்து 5 பேர் கொண்ட கும்பல் ஏலகிரி மலையில் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திருமாஞ்சோலையில் உள்ள சக்திவேல் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, சக்திவேலை அழைத்து ஐஸ்வர்யாவை திருமணத்திற்காக வற்புறுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
அப்போது சக்திவேல் மற்றும் ஐஸ்வர்யாவின் நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சக்திவேல் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து 5 பேரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில், இரண்டு பேர் தப்பி ஓடிய நிலையில், மூன்று பேரை பொதுமக்கள் வாணியம்பாடி நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், அவர்கள் கொண்டுவந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்கள் தாக்கியதில் பூவரசன், ஹரி, சாந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்ததால் அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் சீண்டல்; ஆசிரியர்களை கைது செய்யக்கோரி போராட்டம்!