திருப்பத்தூர்: வாணியம்பாடியில் நேற்று இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மீட்பப் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கிராமிய தலைமை காவலர் முரளி மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் உடல் அவரது சொந்த ஊரான ஆம்பூர் பகுதியில் 21 குண்டுகள் முழங்க காவல் துறையினரின் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில், நேற்று காலை அரசுப் பேருந்தும், தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த வாணியம்பாடி கிராமிய தலைமை காவலர் முரளி (46) என்பவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சக காவலர்கள் அவரை மீட்டு, உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று தலைமை காவலர் முரளியின் உடல் அவரது சொந்த ஊரான ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பின்னர் உடல் ஊர்வலமாக ஏ-கஸ்பா மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 21 குண்டுகள் முழங்க காவல் துறையினரின் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும், உயிரிழந்த காவலர் முரளி கடந்த 2003ஆம் ஆண்டு காவலராக பணியில்ச் சேர்ந்த நிலையில், கடந்த 20 ஆண்டு காலமாக ஆம்பூர் தாலுகா, நகர காவல் நிலையம், உமராபாத், வாணியம்பாடி நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சஞ்சனா என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் மகளும், லோகித் என்ற 5ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.