திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) நடைபெற்றது. இந்நிலையில் நகராட்சிக்குள்பட்ட 14ஆவது வார்டில் அதிமுக சார்பில் சரவணன் என்பவரும், திமுக சார்பில் ஆறுமுகமும், பாஜக சார்பில் உதயகுமார் உள்பட ஐந்து வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
அப்போது, திமுக வேட்பாளர் ஆறுமுகம் வெளியாட்களை அழைத்துவந்து தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் அலுவலர்கள், காவல் துறை உதவியுடன் 400-க்கும் மேற்பட்ட கள்ள ஓட்டு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை நேரில் பார்த்ததாகக் கூறும் பாஜக வேட்பாளர் உதயகுமார், அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளார்.
இதற்கு, திமுகவினர் அவரைத் தாக்க முயன்றுள்ளனர். தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் ஆளும் கட்சியினருக்குச் சாதகமாகச் செயல்பட்டு புகார் அளித்த பாஜக வேட்பாளரையே தடுத்து வெளியேற்றியுள்ளனர்.
இதனால், திமுகவினர் கள்ள ஓட்டுப் போட்ட 14ஆவது வார்டு பகுதிக்கு மறுவாக்குபதிவு நடத்தக் கோரி மாநில தேர்தல் ஆணையம், ஆம்பூர் நகராட்சித் தேர்தல் அலுவலரிடம் பாஜகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் அலுவலருக்கு மிரட்டல்: கடம்பூர் ராஜு மீதான வழக்கு ரத்து!