திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கும் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
பவித்ரா ஆகஸ்ட் 30ஆம் தேதி மேல்பள்ளிப்பட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (செப்.1) காலை குளிப்பதற்காக சுடு தண்ணீர் வேண்டி குடத்தில் உள்ள தண்ணீரில் வாட்டர் ஹீட்டரை வைத்துள்ளார்
அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அனன்யா வாட்டர் ஹீட்டரை பிடித்து இழுத்துள்ளார். இதனையடுத்து குழந்தை மீது மீன்சாரம் பாய்ந்துள்ளது. தொடர்ந்து குடம் கீழே விழுந்த சப்தம் கேட்ட பவித்ரா வந்து பார்த்தபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது.
உடனே குழந்தையை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் அறிந்து வந்த வாணியம்பாடி கிராமியக் காவல் துறையினர், குழந்தை உயிரிழப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்பூரில் இறந்த நிலையில் பிறந்த குழந்தை: உறவினர்கள் முற்றுகை