திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் சோலூர் பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கு கடந்த 2ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவனுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, மாணவன் பயிலும் பள்ளி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ஆணையர் சௌந்தரராஜன் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்தனர்.
மேலும், மாணவனுடன் பயிலும் சக மாணவர்கள் 51 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மாணவன் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.