திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பத்தைச் சேர்ந்தவர், ஆர்.வடிவேலு. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை 19 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சரான ஜெயலலிதாவின் அமைச்சரவையில், வடிவேலுவை ஊரக தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது 82 வயதான வடிவேலுவிற்கு, இருதயம் தொடர்பான உடல் பிரச்னை இருந்ததால், பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவர் நேற்று (நவ.27) இரவு 8 மணியளவில், வாணியம்பாடி அடுத்துள்ள சம்பந்திகுப்பத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். மேலும், இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில், இவருக்கு இரண்டு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
மேலும் வடிவேலுவின் உடல், இன்று பிற்பகலுக்கு மேல் சம்பந்திகுப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல” - சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கறிஞர் சரவணன் கருத்து!