திருப்பத்தூர்: கும்மிடிக்காம்பட்டி கிராமத்தில் சின்னூர் ஏரி மற்றும் அணிகானூர் ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழை மற்றும் லேசான மழையின் காரணமாக சின்னூர் ஏரி நிரம்பியது.
அணிகானூர் ஏரி சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கென நீர் வழி மற்றும் வாய்க்கால் எதுவும் இல்லாத காரணத்தால் பல வருடங்களாக ஏரி நிரம்பாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சின்னூர் ஏரியிலிருந்து 4 மின்மோட்டார் மூலம் தண்ணீரை பம்ப் செய்து அணிகானூர் ஏரிக்கு தண்ணீரை நிரப்ப, ஊராட்சிமன்ற தலைவர் கோடீஸ்வரன் எடுத்த முயற்சியினால் 50 வருடங்களுக்குப் பிறகு தற்போது அணிகானூர் ஏரி நிரம்பியுள்ளது.
அதன் காரணமாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஊர் பொதுமக்கள் அணிகானூர் ஏரிக்கு பூஜை செய்து தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர். மேலும் இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர்.