திருப்பத்தூர்:Tirupathur Advocate Protest: திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், சுமார் 20க்கும் மேற்பட்டோருடன் ஊழலுக்குத் துணை போவதாக வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்தும்; தன் மீது கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கறுப்புக்கொடி பிடித்து அமைதிப் போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், 'எங்கள் பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சாலை போடுகிறார்கள். முறையற்ற வகையில் சுமார் 100 பேருக்கும் மேலாக இலவச வீடுகள் கட்டிக் கொடுத்ததாகப் போலி பில்கள் போட்டு ஊழல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
100 நாள் வேலைத்திட்டத்தில், 100 பேருக்கு மேல் போலி அட்டைகள் தயாரித்து பில் போடுவதாக கூறப்படுகிறது.
கவுண்டப்பனூர் செம்மன் குழி மேடு செல்லும் சாலையை எட்டு மாதத்திற்கு முன்பு தோண்டி அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து துறை சார்ந்த அனைவருக்கும் மனு கொடுத்துவிட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
உயர் நீதி மன்றம் உத்தரவை மதிக்கவில்லை
மேலும் திருப்பத்தூர் தர்மபுரி நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வரைச்சென்று உத்தரவு வாங்கியும்; அதை அமல்படுத்தாமல் அரசுக்கு தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்கள்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வந்து எந்தப் பணி ஆணை எவ்வளவு தொகைக்கு விடப்பட்டுள்ளது என்கிற தகவலைக் கேட்டால் எதுவும் தெரியாது என்கிறார்கள்.
திமுக நிர்வாகியின் கொலை மிரட்டல்
இது போன்று பல ஊழல்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் துணை போவதைத் தடுக்க வேண்டும். என் மீது கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீம் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:2021ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!