திருப்பத்தூர்: வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி வேல் (30). இவர் பெங்களூரில் தனியார் உணவகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதியன்று வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில், வெற்றிவேல் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஊழியரிடம் டோக்கன் பெற்று பெங்களூர் சென்றுள்ளார்.
இன்று (அக்.26) காலை மீண்டும் வாணியம்பாடி வந்த வெற்றிவேல், இருசக்கர வாகன நிறுத்தத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர வாகனம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடனடியாக இதுகுறித்து ஊழியரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் தங்களுக்குத் தெரியாது எனக் கூறியுள்ளனர்.
பின்னர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது, இருசக்கர வாகன நிறுத்தத்தில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இருந்தபோதும் வெற்றிவேலின் பல்சர் இருசக்கர வாகனத்தை மட்டும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வெற்றி வேல் வாணியம்பாடி நகர காவல் நிலையில், புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வாகனத்தைத் திருடிச் செல்லும் அடையாளம் தெரியாத நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி: நள்ளிரவில் பெட்ரோல் திருடும் கும்பல்