திருப்பத்தூர்: சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருப்பத்தூரைச் சேர்ந்த தேன்மொழி உள்பட பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதனையடுத்து, தேன்மொழி மூலமாக ராஜேஷிடம் பணம் கொடுத்தவர்கள் தேன்மொழியை அணுகி தங்கள் பணத்தின் நிலை குறித்து தொடர்ச்சியாக கேட்டுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேன்மொழி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தேன்மொழி, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இத்தவலறிந்த ராஜேஷ், தேன்மொழியை தொடர்பு கொண்டு, தான் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் எனவும் உதயநிதியின் உதவியாளர் எனவும் மிரட்டும் தொனியில் பேசியது தனியார் தொலைக்காட்சியில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சரகர் டிஐஜி பாபு இந்த புகார் குறித்து கவனம் செலுத்தி வரும் நிலையில், ராஜேஷ் மீண்டும் தேன்மொழியை அழைத்து வீட்டின் முகவரியை கொடுக்குமாறு மிரட்டல் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது!