திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.
இதனைக் கண்ட காவல் துறையினர், அந்த காரை சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர், காரில் சோதனை மேறக்கொண்டபோது அதில் கத்தி, வீச்சு அரிவாள் உள்ளிட்ட பல பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக காரை பறிமுதல் செய்த காவல் துறையினர் கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த காசி என்பதும், இவர் மீது நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட நகர காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக காசியை கைது செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானல் சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல ஒரே நுழைவுக் கட்டணம் வசூல்: பலர் அதிருப்தி