திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீதர். இவர் திருப்பத்தூர் திமுக மாவட்ட மீனவர் அணி அமைப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி மாலை, வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஸ்டான்லி பாபு தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்ட அரங்கிற்குள் குடிபோதையில் நுழைந்த இவர், ‘10ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எங்கே?’ என்று கேட்டு ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வெளியில் வந்த ஸ்ரீதர், தேநீர் கடை அருகே நின்று கொண்டு அங்கு இருந்தவர்களை ஆபாசமாகப் பேசிவிட்டு, வாணியம்பாடியில் 15-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெறும் எனப் பேசியுள்ளார். இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, ‘நகராட்சி அலுவலகத்திற்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாகப்பேசிய ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ரகளையில் ஈடுபட்ட ஸ்ரீதர் மீது 155/2022 448, 341, 353, 186, 506 (i) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள திமுக பிரமுகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் நகராட்சி ஆணையாளரை அவதூறாக பேசிய திமுக பிரமுகர் மீது புகார்!