திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 45 பேர், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று (செப். 11) அதிகாலை அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது, நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற வேன் பஞ்சர் ஆகி நின்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து வேன் ஓட்டுநர், பஞ்சர் ஆன வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில், வேனில் இருந்தவர்களும் சாலையிலேயே நின்றுள்ளனர். அப்பொழுது அதே சாலையில் வேகமாக வந்த மினி லாரி, பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேன் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி, எதிர் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த கோர விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உள்பட 10 பேரை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அவர்களை உடனடியாக மீட்டு வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில், விபத்தில் உயிரிழந்த பெண்கள் மீரா, தெய்வானை, சேட்டாம்மாள், தேவகி, சாவித்திரி, கலாவதி ஆகியோர் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் ஒருவரது சடலம் மட்டும் அடையாளம் காணப்படாத நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையில் ஈடுபட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: வி.கே.குருசாமி தாக்குதல் வழக்கு: மதுரையில் ஒருவரை கைது செய்த பெங்களூரு போலீசார்!