திருப்பத்தூர்: ஆம்பூர் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சிக்னலில் (சமிக்ஞை) ஆம்பூர் நகர காவல் துறையினர் நேற்று (பிப்ரவரி 2) காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, காரில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, காரில் இருந்த ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காரில் வந்த ஐந்து பேரில் ஒருவர் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் என்பதும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், உடன் பயணித்த பேச்சிமுத்து, சூர்யா, அருண் பாண்டியன், காசிராமன் ஆகிய நான்கு பெரும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் மீதும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இவர்கள் தேர்தல் காரணமாக கைது நடவடிக்கைக்குப் பயந்து வெளி மாநிலத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது ஆம்பூரில் சிக்கி கைதானது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய கார், மூன்று கத்திகளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: உறவாடிய உறவினர்; களவாடிய திருடன்! - சென்னையில் பரபரப்பு