திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து கஞ்சா கடத்தி செல்வதாக வேலூர் மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பின்னர் ரகசிய தகவலின் பேரில், வேலூர் மத்திய நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் விண்ணமங்கலம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்க்கொண்டனர்.
அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வட மாநில இளைஞர்களைப் பிடித்து சோதனை மேற்கொண்ட போது, அவர்கள் வைத்திருந்த பைகளில் சுமார் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் குமார், அமித் குண்டு, பிகாஸ் நாயக் என்பதும் அவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ கஞ்சாவை வாணியம்பாடி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக, ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் அரசு பேருந்தில் 60 கிலோ கஞ்சா கடத்தி வந்த குஜராத் மாநில இளைஞரை ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்டோக்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தொடங்கி வைத்த அமைச்சர்..!