திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இன்று (அக் 23) விடியற்காலை நாட்றம்பள்ளி தனிவட்டாட்சியர் குமார் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட லாரியின் ஓட்டுநர் அலுவலர்களைக் கண்டவுடன் லாரியை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
உடனடியாக தனிவட்டாட்சியர் தலைமையிலான குழு லாரியில் சோதனை மேற்கொண்டபோது அந்த லாரியில் கள்ளத்தனமாக ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கர்நாடக மாநிலத்தின் எந்த பகுதிக்கு அரிசி கடத்திச் செல்லப்பட்டது, தப்பியோடிய லாரி ஓட்டுநர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் லாரியில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை