திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் காதர்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் கலீல் என்பவர், சி.எல் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு நாட்டு மருத்துவரிடம், மருந்து சாப்பிடுவதற்காக சென்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், வீட்டின் பின்புறம் இருந்த இரும்பு கம்பியை வளைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) இரவு வீட்டிற்கு வந்த அப்துல் கலீல், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள்,பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனடியாக வாணியம்பாடி நகர காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 15 நாட்களாக வாணியம்பாடி நகர பகுதியில் அண்ணா நகர், கூஜா காம்பவுண்ட், நியூ டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை, பர்னிச்சர் கடை, வீடுகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.