தூத்துக்குடி : தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில், நண்பனையே வெட்டி படுகொலை செய்த 3 பேரை போலீஸ் தேடுகிறது.
தூத்துக்குடி புதிய துறைமுக நகரில் வசித்து வருபவர் சங்கர் (வயது 47). இவர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
திருமண நிகழ்ச்சியில் தகராறு
இவருடைய மகன் ராமநாதன் என்ற ரமேஷ் (வயது 21). ரமேஷுக்கு படிப்பு சரிவர வராததால் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி தூத்துக்குடி 3ஆவது மைலில் நடந்த நண்பரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ரமேஷ் கலந்துகொண்டார்.
அப்போது திருமண நிகழ்ச்சியில் வைத்து அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று, ரமேஷின் வீட்டிற்கு சென்ற சிலர் இதுதொடர்பாக அங்கு அவரிடம் விளக்கம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.
கொலை செய்ய திட்டம்
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடவும் ரமேஷின் நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து, கூடா நட்பால் வந்த அவமானத்தை சொல்லி சங்கர், தன்மகன் ரமேஷை கண்டித்துள்ளார். இதனால் தந்தை-மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரவு 10.30மணி அளவில் ரமேஷ் அவருடைய வீட்டைவிட்டு வெளியேறி 3ஆவது மைலில் உள்ள டேவிட்ராஜ் என்பவரின் வீட்டு மாடியில் அடைக்கலம் புகுந்தார்.
இதைத் தெரிந்துகொண்ட ரமேஷின் நண்பர்களான, தூத்துக்குடி பி&டி காலனியை சேர்ந்த ராஜபாண்டி(21), 3ஆவது மைலை சேர்ந்த முத்துப்பாண்டி(21), கிருபை நகரை சேர்ந்த ராகுல் ஆகியோர் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கையில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் டேவிட்ராஜ் வீட்டருகே பதுங்கி இருந்தனர்.
அரிவாள் வெட்டு- கொடூரக் கொலை
இந்நிலையில் அதிகாலை 2.45 மணி அளவில் திபுதிபுவென டேவிட்ராஜ் வீட்டு மாடிக்கு சென்ற அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரமேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் துடிதுடித்து பலியானார்.
சத்தம்கேட்டு பக்கத்து வீட்டினர் மாடிக்கு வரவும், கொலையாளிகள் அங்கிருந்து குதித்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து, டேவிட் ராஜ் சிப்காட் காவல் நிலையத்துக்கும், ரமேஷின் தந்தை சங்கருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சங்கர் தன்மகன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.
போலீஸ் விசாரணை
இதற்கிடையே, அங்கு வந்த போலீசார், ரமேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : கார் மோதி மாற்றுத்திறனாளி மூதாட்டி உயிரிழப்பு