தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகேவுள்ள சூரங்குடி துவரந்தை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலமுருகன் (25). இவர், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் அண்ணன் என்ற பேரில் பேச தொடங்கியுள்ளார்.
நாளடைவில் சிறுமியிடம் செல்போன் எண் வாங்கி, அவரை காதலிப்பதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த சிறுமி, சகோதரன் என்று கூறியதால்தான் பேசினேன் இல்லையென்றால் பேசியிருக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார். இருந்தபோதிலும், பாலமுருகன் தன்னை காதலிக்கும்படி விடாமல் சிறுமிக்குத் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜுன் 19) சிறுமிக்கு அழைப்பு விடுத்த பாலமுருகன், தன்னை காதலிக்கும் படி மிரட்டில் தொனியில் பேசியுள்ளார். மேலும், குளியலறையில் குளிக்கும்போது மறைமுகமாக எடுக்கப்பட்ட வீடியோ தன்னிட்டம் இருப்பதாகவும், அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றினை கூறியுள்ளார். இதையெடுத்து சிறுமியின் தந்தை, பாலமுருகனின் வீட்டிற்குச் சென்று இது குறித்து கேட்டுள்ளார். அப்போது பாலமுருகன், அவரது தந்தை பழனிச்சாமி, தாய் மாரியம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து சிறுமியின் தந்தையை தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பாலமுருகன் அவரது பெற்றோர் பழனிசாமி, மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், பழனிசாமி, மாரியம்மாள் இருவரையும் ஜாமீனில் விடுவித்த காவல் துறையினர், பாலமுருகன் மீது மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை மணந்த இளைஞர்: பாய்ந்த போக்சோ சட்டம்!