இன்றைய இளைய தலைமுறையினர் இணையதள விளையாட்டுகளுக்கும், செயலிகளுக்கும் அடிமையாகி வருகின்றனர். தற்போதைய இளைஞர்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக தனது சமூகத்தின் பெருமையையும், சமூக அடையாளத்தையும் வெளிப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சாதி, மதங்களை கடந்து சமத்துவமாக வாழ்ந்து வரும் தமிழ்ச்சமூகத்தில் பெயருக்கு பின்னால் சாதி பெயரை குறிப்பிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
டிக் டாக் செயலியால் தற்கொலைகளும், பாலியல் ரீதியான துன்புறுத்தலும், சாதி ரீதீயான பிரச்னைகளும் நிகழ்ந்து வருகிறது. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நபரை இழிவாக பேசும்நிலை உருவாகிறது. இதனால் சாதிக் கலவரங்கள் ஏற்படும் வகையில் அதிர்வலையை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி அய்யலு தெருவைச் சேர்ந்தவர் சந்தானராஜ் என்பவரது மகள் சுதா. இவர் பட்டியல் இனத்தவர்கள் குறித்து சமீபத்தில் அவதூறாக பேசி வீடியோ ஒன்றை டிக் டாக்கில் பதிவு செய்தார். இந்த வீடியோவில், மிகவும் கொச்சையாகவும், வாய்க்கு வந்தபடியும் பேசியது பட்டியலின மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சுதாவுக்கு பலர் கடும் கண்டனங்கள் தெரிவித்துவந்தனர். தற்போது இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் திம்மராஜபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் சுதா மீது புகாரளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் சுதா மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுதாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.