உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் ஒன்றான தூத்துக்குடியில் நேற்று மாலை முதலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ன விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தன.
தூத்துக்குடியில் முக்கிய தேவாலயங்களான பனிமய மாதா பேராலயம், திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், தூய பேட்ரிக் தேவாலயம், தூய பேதுரு தேவாலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. குடும்பம் குடும்பமாய் வந்த மக்கள், புத்தாடை உடுத்தி சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கிறிஸ்துமஸையொட்டி புனித பனிமய மாதா ஆலயத்தில் ஆலய பங்குத் தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது மக்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலக மக்கள் அன்பில் திழைக்கவும், வருகிற 2020ஆம் ஆண்டு தொழில்வளம் பெருகி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழவும் வேண்டுகிறோம். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை மாறி சமாதானம் பரவவும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்" என தெரிவித்தனர்.
கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் அந்தரத்தில் பறக்கும் பலூன் வடிவமைப்பிலும், ராக்கெட் வடிவமைப்பிலும் கிறிஸ்துமஸ் கேரல் வாகனம் அலங்கரிக்கப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்த இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் பொதுமக்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் கேரல் கொண்டாட்டங்களால் நேற்று மாலை முதலே தூத்துக்குடி நகரமே உற்சாகத்தில் மிதந்தது.
இதையும் படிங்க: மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த கட்சி நிர்வாகி... ஆபாசமாக திட்டும் அதிமுக எம்.எல்.ஏ.