தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த அனைத்து வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை ஆதரித்து தூத்துக்குடி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு மன வேதனையளிப்பதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த துளசி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து தனலெட்சுமி என்பவர் கூறியதாவது, "ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த காலகட்டம் வரையிலும் பெண்கள் முன்னேற்றம் சிறப்பாக இருந்தது. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சுய தொழிலுக்காகவும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தினர் செய்து வந்தனர்.
ஆண்களின் துணையின்றி சுய சார்பாக பெண்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு வேதாந்தா நிறுவனம் பெரிதும் உதவிகரமாக இருந்தது. எங்கள் பகுதியைச் சேர்ந்த பல பெண்கள் உப்பள தொழிலை விட்டுவிட்டு சுய தொழிலுக்கு மாறினர். மெழுகுவர்த்தி செய்தல், கை பை தயாரித்தல், செருப்பு தயாரித்தல், அலங்காரப் பொருள்கள் செய்தல், சோப்பு செய்தல் உள்ளிட்ட குடிசை தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு வேதாந்தா நிறுவனம் உதவி செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் வேலை வாய்ப்புகள் ஏதுமில்லாமல், பழைய தொழிலான உப்பள தொழிலுக்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. . தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திடவும் பெண்களின் சுய முன்னேற்றத்திற்காகவும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திருவனந்தபுரம் விமான நிலையம் : உச்சம் தொடப்போகும் கேரள அரசு Vs அதானி குரூப் சண்டை!