கும்பகோணம் : கடந்த நவ 6ம் தேதியன்று சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் 28வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ மகாலிங்க தேசி பரமாச்சாரிய சுவாமிகள் (54) கடந்த அக் 10ம் தேதி கர்நாடக மாநிலம் சென்று ஹேமாஸ்ரீ என்ற 47 வயது பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக அவரது திருமண பதிவு ஆவணம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்த ஆதீனம், திருமணம் செய்து கொண்டது உண்மை தான். இதனை மறைக்க விரும்பவில்லை. இந்த ஆதீனத்தில் 10க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்கள் ஆதீனங்களான செயலாற்றியுள்ளனர் என தன்னிலை விளக்கம் அளித்தார்.
ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட அவரது ஸ்ரீ கார்யம் உள்ளிட்ட சிலர், ஆதீன மரபை மடாதிபதி மீறி விட்டார் அவரை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசும், பிற சைவ ஆதீனங்கள் கூடி விவாதித்து முடிவு எடுத்து தவறானவர்கள் கைக்கு இந்த மடம் செல்லாமல் தடுத்து நிறுத்தி ஆதீன மரபை காப்பாற்றிட வேண்டும் என ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.
இந்நிலையில், பதிவு திருமண சர்சையில் சிக்கியுள்ள சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீ மகாலிங்க தேசி பரமாச்சாரிய சுவாமிகள் தனது வழக்கறிஞர்கள் ஏ.செல்வம் மற்றும் எம்.அழகர் ஆகியோர் மூலம் பதிவு அஞ்சல் ஒன்றை ஸ்ரீ சுவாமிநாத சுவாமிகளுக்கு அனுப்பியுள்ளார்.
அதில், ஸ்ரீ சுவாமிநாத தேசிகசுவாமிகள் அவர்களுக்கு, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், சூரியனார் கோயில் ஆதினகர்த்தா, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதியான ஸ்ரீ ல ஸ்ரீ சிவாக்ரயோகி மடாதிபதியின் முறையான தகவலின்படி கொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகான அறிவிப்பு என்னவென்றால்,
இந்த வழக்குரைஞர் அறிவிப்பின்படி தங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், தங்களின் சமீபத்திய ஸ்ரீலஸ்ரீ
மகாலிங்க பண்டார சந்நிதியான, ஸ்ரீ ல ஸ்ரீ சிவாக்ரயோகி மடத்தின், ஆதினகர்த்தாவிற்கு எதிரான தனிப்பட்ட விரோதம் காரணமாகவும், திருமடத்தின் சட்டப்படியான நிர்வாக நடைமுறையை எதிர்க்கும் விதமாகவும், இத்திருமட விரோத சுயநலமிகளின் தூண்டுதல்களின் பேரில், சமீப காலங்களில், தமிழ்
செய்தித்தாள்களிலும், ஊடகத்திலும் கொடுக்கப்பட்ட பேட்டிகள் திருமடத்தின் ஆதினகர்த்தாவின் சீரிய நிர்வாக
நலனுக்கு எதிராகவும், திருமடத்திற்கு பாத்தியப்பட்ட அசையாச் சொத்துக்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து
மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்,
நடத்தப்பட்டதாக தெரியவருவதாலும், திருமடத்தின் குரு சிஷ்ய பாரம்பரியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில்
தங்களின் நடவடிக்கை இருப்பதால், தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்ரீ கார்யம் என்ற தகுநிலையை இழந்து
விட்டீர்கள் என்பதால், நீங்கள் இத்திருமடத்திற்கு தகுதியற்றவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : "தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபிக்கிறது"- தஞ்சை சதய விழாவில் ஆதீனம் நெகிழ்ச்சி!
ஆதலால், இத்திருமடத்திற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும், சம்பந்தமும் இல்லை. இவ்வறிப்பு கண்ட
நாள் முதல், திருமடத்தின் பெயரை தாங்கள் எவ்விதத்திலும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதற்கிடையே இன்று திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு முக்கிய கிராமங்களில், சூரியனார்கோயில் ஆதீனத்தை கண்டித்து, போலி சாமியாரே மடத்தை விட்டு வெளியேறு என்ற ரீதியில் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிதக்கது.
இதற்கிடையே சைவ ஆதீனகர்த்தகர்கள் வரும் 14ம் தேதி வியாழக்கிழமை ஒன்றாக சந்தித்து சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் திருமணம் செய்து கொண்ட நடவடிக்கையில் ஒரு நிலையான முடிவை தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்