மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி கடந்த 2 ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிவரஞ்சனி வலியால் துடித்தகவும், அறுவை சிகிச்சை செய்ய உறவினர்கள் வலியுறுத்தியும் அதனை மருத்துவர்கள் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த ஆறாம் தேதி பேச்சு மூச்சு இன்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து 6 மணி நேரம் குழந்தைகள் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கடந்த 7ஆம் தேதி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஒசூரில் போலி மருத்துவர்கள் கைது..கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்!
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த குழந்தை, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதப்படுத்தியதால்தான் குழந்தை இறந்ததாகக் குற்றம் சாட்டிய உறவினர்கள், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை எதிரே குழந்தையின் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இறந்த குழந்தையின் பெற்றோர் உறவினர்கள் குழந்தையின் சடலத்துடன் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இரண்டு மணி நேரத்தை கடந்தும் நடைபெறும் இப்போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி, வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவரை பணிநீக்கம் செய்வதாக மாவட்ட சுகாதாரத் துறை பணிகள் இணை இயக்குநர் பானுமதி அறிவித்த நிலையிலும், அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.