ராஞ்சி/வயநாடு: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (நவ.13) நடைபெறவுள்ள நிலையில், அங்கு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதேபோன்று வயநாடு உள்ளிட்ட இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் பிரச்சாரம் நிறைவடைந்தது. பல்வேறு கட்சித் தலைவர்கள் இறுதிகட்ட தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மொத்தம் 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு நவம்பர், 13, 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட தேர்தலில் 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அத்தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட தலைவர்கள் பாஜகவுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். எதிரணியில் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜேஎம்எம் தலைவர் கல்பனா சோரன் உள்ளிட்ட தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசார்த்தில் ஈடுபட்டனர். ஹிமந்த சர்மா, மான்ஜி, ஆதித்யாநாத் உள்ளிட்ட மாநிலத்தில் பிரபலமான தலைவர்களும் இறுதி நாளான இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜார்க்கண்டில் இன்று மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது மத்திய அரசையும், பாஜகவைுயும் கடுமையாக சாடினார். மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதாகவும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதாகவும் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார்.
இதனிடையே, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமும் திங்கள்கிழமை நிறைவடைந்தது. நவம்பர் 13ஆம் தேதி இத்தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வயநாட்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வேட்பாளராக பிரியங்கா காந்தி, இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) வேட்பாளர் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். வயநாட்டின் முன்னாள் எம்.பி,யான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமது சகோதரி பிரியங்காவுக்காக வயநாட்டில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.