தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்த கமலுக்கு, பரப்புரை செய்ய கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை சந்தித்து மட்டும் கமல்ஹாசன் பேசினார். இந்நிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்ஜிஆருக்கு நீட்சியாக எந்த நடிகர் வேண்டுமானாலும் இருக்கலாம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். திமுகவிலும் அதன்பின்னர், அதிமுக ஆரம்பித்த பின்னரும் எம்ஜிஆரை மக்கள் திலகம் என்றுதான் அழைத்தார்கள். எம்ஜிஆர் ஏழரை கோடி மக்களுக்கும் சொந்தமானவர். யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம். அதில் நானும் ஒருத்தன்.
எங்கள் சுற்றுப்பயணத்துக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. மக்களைத் தேடிச்செல்கிறோம். வேட்பாளர் நியமனம் என்பது இப்போது இல்லை. நாங்கள் கூர்மையாக கவனித்து வருகிறோம். புதிதாக கட்சித் தொடங்கியவர்கள் ஒரு காரணத்திற்காக வருகிறார்கள்.
நாங்கள் ஏன் கட்சி தொடங்கினோம் என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். ரஜினியும் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னும், அவர்கள் கொள்கை குறித்து சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் சொல்வதை கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. எங்களுக்குள் உதவி செய்ய முடிந்தால், உதவி செய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால், எந்த ஈகோவும் இல்லாமல் நாங்கள் ஒத்துழைப்போம்.
நான் காந்தியின் பி டீம் ஆக மட்டுமே இருப்பேன். வேறு யாருக்கும் பி டீம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் ஏ டீமுக்காக தயார் செய்துகொண்டு வந்தவர்கள். ஒத்திகைப் பார்த்து பயிற்சி எடுத்து வந்தவர்கள்" என்றார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சியினரின் சுயநல வேட்டைக்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது - கமல் ஹாசன்