தூத்துக்குடி: ஆசிய சிலம்பாட்டம் போட்டியானது, நாகர்கோவில் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், திருச்சி, தருமபுரி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட 6 நாடுகளும் கலந்து கொண்டன. மேலும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில், கோவில்பட்டியைச் சேர்ந்த நான்கு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயதுக்கு உட்பட்ட தனித்திறமை பிரிவில் மூன்றாம் இடமும், கம்பு சண்டையில் இரண்டாம் இடமும் மாணவி அஞ்சனா வெற்றி பெற்றார். 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், குத்து வரிசையில் மூன்றாம் இடமும், கம்புச்சண்டையில் மூன்றாம் இடமும், குழு ஆயுத வீச்சில் மூன்றாம் இடமும் மாணவர் சபரிஜெயன் வெற்றி பெற்றார்.
கம்பு சண்டைப் பிரிவில் மூன்றாம் இடமும், குழு ஆயுத வீச்சில் மூன்றாம் இடமும் மாணவர் சாய் கார்த்திக் வெற்றி பெற்றார். மான் கொம்பு வீச்சில் இரண்டாம் இடமும், குழு ஆயுத வீச்சில் மூன்றாம் இடமும், மாணவர் ஸ்ரீராம் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு ஆசிய சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் சார்பில் மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் தலைமையில், 22வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜெசி, மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் முருகன், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சட்ட ஆலோசகர் ரங்கராஜ், டி.சி.எஸ்.ஜே சிலம்பு பள்ளித் தலைவர் வெற்றி, தமிழ் கல்ச்சுரல் டிரஸ்ட் பொருளாளர் சூர்யா, ஐயப்பன் அன்கோ மகாராஜன், அமெச்சூர் சிலம்பம் சங்கம் மாவட்டச் செயலாளர் மற்றும் சிலம்பாட்ட பயிற்சியாளர் சோலை நாராயணசாமி, அமெச்சூர் சிலம்பம் சங்கம் மாவட்ட செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் சிவராமலிங்கம் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆங்கிலப் புத்தாண்டு 2024; அரசியல் தலைவர்கள் வாழ்த்து!