தேவேந்திரகுல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியனின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய நினைவிடம் அமைந்துள்ள தூத்துக்குடி அலங்காரத்தட்டு கிராமத்தில் இன்று குருபூஜை விழா நடைபெற்றது.
விழாவை தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பார்வதி சண்முகசாமி தலைமைதாங்கி நடத்தினார். இதில் மாநில நிர்வாகிகள் ரமேஷ் பாண்டியன், மகேஷ்வர பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் பார்வதி சண்முகசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், "தேவேந்திரகுல வேளாளர் மக்களை வெறும் சாதி அமைப்புகளில் மட்டுமே பொறுப்புகளில் அமரவைத்து வேடிக்கைப் பார்க்கின்றனர். இன்னும் முக்கியப் பொறுப்புகளுக்கு நாங்கள் வரவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் தேவேந்திரகுல மக்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்திவருகின்றனர். தேவேந்திரகுல மக்களின் வலிமை என்னவென்று இன்னும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் எங்கள் குல மக்களுக்கு அளிக்கப்படும் முக்கியப் பொறுப்புகளைப் பொறுத்து ஆட்சி மாற்றமும் அரசியல் மாற்றமும் வரும் என நம்புகிறோம்.
![பசுபதி பாண்டியனின் 9ஆம் ஆண்டு நினைவு தினம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-pasupathipandian-gurubooja-vis-script-7204870_10012021134535_1001f_1610266535_1096.jpg)
தேவேந்திர குல மக்களைப் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி வலியுறுத்திவருகிறோம். இன்னும் 30 நாள்களுக்குள் இதற்கான அரசாணை வெளிவரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எந்தக் கட்சியினர் எங்களைப் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கின்றனரோ அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு இருக்கும்.
பசுபதி பாண்டியனின் நினைவு நாளையொட்டி காவல் துறையின் கெடுபிடிகள் இருந்தாலும் தற்போது எல்லா ஊர்களிலிருந்தும் குருபூஜை விழாவிற்கு ஆதரவாளர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். ஒத்துழைப்புத் தந்து குருபூஜை விழாவிற்கு அனுமதியளித்த காவல் துறைக்கு நன்றி" என்றார்.
பசுபதி பாண்டியனின் நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 1400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 90 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.