தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத்தலமுமானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் தெய்வானை (25) என்ற யானை கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருவிழாக்களின்போது சுவாமி வீதியுலா வரும்போது, யானை முன்னே வருவது வழக்கம். மற்ற நாட்களில் கோயில் முன்பு நிறுத்தப்படும். சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், யானையை வணங்கி செல்வதும் உண்டு. இந்த யானைக்கு பக்தர்கள் நேரடியாக உணவு வழங்குவதறகு தடை செய்யப்பட்டுள்ளது.
யானை பராமரிப்பாளர்களால் தினமும் தென்னை ஓலை, நாணல் புல், கோத்ரி புல் போன்ற இயற்கை உணவுகள் வழங்கப்படும். இதனைத் தவிர பக்தர்கள் துலாபாரத்தில் தானமாக வழங்கும் அரிசி, பயறு, சீரகம், மிளகு ஆகியவை கலந்து கோயில் மடப்பள்ளியில் சாதமாக தயாரிக்கப்பட்டு காலை மற்றும் மாலையில் வழங்கப்படுகிறது. இந்த யானை தினமும் காலை மாலையில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அதேபோல், தினமும் சரவணப்பொய்கையில் உள்ள குளியல் தொட்டியில் யானை இயற்கையாக குளிப்பதுண்டு.
இந்நிலையில், திருச்செந்தூர் கோயில் யானை பின்னங்காலில் உண்ணிகள் கூடு கட்டியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் கால்நடை மருத்துவர் பொன்ராஜ் நேரில் பரிசோதனை செய்தார். இதில் யானை நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்தது. மேலும், யானை படுக்கும்போதும், கிழே அமரும்போதும் முட்டி போட்டுதான் எழும். அப்போது ஏற்படும் உராய்வினால் காலில் காய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் அறக்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் கூறுகையில், “கோயில் யானை தெய்வானை மாதந்தோறும் கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், யானையின் காலில் உண்ணிகள் இருப்பதாக யாரோ சமூக வலைத்தளத்தில் பரப்பி விட்டதால் உடனடியாக யானைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் யானைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்தது. வழக்கமாக யானை படுக்கும்போதும், அமரும்போதும், முட்டி போடும்போதும் ஏற்படும் சிராய்ப்புதான் காய்ப்புகளாக உள்ளது. இதனை தவறாக சிலர் சித்தரித்து விட்டனர். கோயிலில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இது போன்ற வதந்திகளை பரப்பி விடுகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: World Rabies day: ரேபிஸ் நோயை தடுப்பது எப்படி? - மருத்துவரின் முழு விளக்கம்!