தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று (டிசம்பர் 23) தூத்துக்குடிக்கு விமானம் மூலம் தொல். திருமாவளவன் எம்பி வந்தடைந்தார்.
அதன்பிறகு விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்த அவர், "மத்திய அரசு நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பின் மதச் சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது.
ஏனெனில் 21 வயதுக்குட்பட்டு சாதி, மத மறுப்புத் திருமணம் நடைபெறுகையில் சம்பந்தப்பட்டவர்களை போக்சோ வழக்கில் கைதுசெய்ய இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. எனவே இந்தத் திருத்தச் சட்டத்தினை சாதி, மத மறுப்பு, திருமணத்தை எதிர்ப்பவர்களே ஆதரிக்கின்றனர்.
மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை இணைப்பதன் மூலம் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது தனக்கு வாக்களிக்காதவர்களை, வாக்களிக்காத சமூகத்தினரின் கணிசமான வாக்குகளை அதிகாரத்தைப் பயன்படுத்திச் செல்லாதவையாக மாற்ற முடியும். எனவே இந்தத் திருத்தச் சட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், மீனவர்களைத் துன்புறுத்துவதும், படகுகளை முடக்குவதும் தொடர்ந்துவருகிறது. இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மீனவர்கள் மீது தொடரும் இந்தத் தாக்குதல் வேதனையளிக்கிறது. இதனை விசிக கண்டிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி பெரும்பாலும் நாடாளுமன்றத்துக்கு வந்து கூட்டத்தில் பங்கேற்பது அரிது. அப்படியே வந்தாலும் நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டுச் செயல்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடாவடி போக்குடன் அனைத்துச் சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றுகின்றனர்.
பிரதமரின் இந்தச் செயல் அவர் ஜனநாயக இரு அவைகள் மீதும் அரசியலமைப்பின் மீதும் எவ்வளவு அக்கறையாகச் செயல்படுகிறார் என்பதையே காட்டுகிறது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவின் போதும் அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். மற்ற யாரும் பங்கேற்பதில்லை" என்றார்.
இதையும் படிங்க: மஞ்சப்பை சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் - ஸ்டாலின்